பக்கங்கள்

திங்கள், 23 ஜூலை, 2012

நிஜமான நாயகன்


புதிய...புதிய சாதனைகளை நிகழ்த்தி, மானுடம் தொட்டுஇருக்கும் வெற்றிகளை  பிரகடனப்படுத்துவதுதான் ஒலிம்பிக் போட்டியின் முக்கியத்துவம்.நெருங்கிவிட்ட ‘லண்டன் ஒலிம்பிக்’ போட்டியை கண்டுகளிக்க உலகம் தயாராகிக் கொண்டு இருக்கிறது.
வெற்றிமீதான வெறியை தேக்கி களத்தில் சாதனை நிகழ்த்த உத்வேகத்தோடு  தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் ஒலிம்பிக் வீரர்கள். பல நாடுகளின் வீரர்களும், கொடிகளும் மைதானத்தில்  பட்டொளி வீசிப்பறக்கும்.காணக்கண்கோடி வேண்டும்தான். பல்லாயிரம் கோடிகள்புரளும்! விரியும் மானுடச்சிறகுகள் புதிய உயரத்தை  எட்டிப்பிடிக்கும்!
    ஒவ்வொரு வீரரும் புதிய சாதனைகளை  படைத்து... உயரங்களை எட்டுவார்கள். அதுவே அவர்களின் இலக்கு. ஆனால், தன் வாழ்வையே சாதனையாக மாற்றியிருக்கும் ஒருவரும் 230 ஙீ250 பிரிவில் பங்கேற்கிறார்.அவர், ஆஸ்கார் பிஸ்டோ ரியஸ்! தென்ஆப்ரிக்காவை சேர்ந்த தடகள வீரர்.25 வயதாகிறது.கார்பன் பைபர் செயற்கை கால்களை  பொருத்திக்கொண்டு பல்வேறு  உள்ளுர், சர்வதேச போட்டிகளில் சாகசம் செய்திருக்கிறார்.
இரண்டுகால்களும்இல்லை.அதனால் என்ன-?
இருக்கவே இருக்கிறது,செயற்கை கால்கள்! தொழில்நுட்ப தெய்வங்களின் வார்ப்புகள்.செயற்கைகால்களை பொருத்திக்கொண்டு ரியசும் தடகளகளத்தில் நிற்கிறார்.நன்றாக இருப்பவர்களே தயங்கும் போட்டியில் தன்னம்பிக்கையோடு கலந்து கொள்கிறார். வெற்றியோ... தோல்வியோ முக்கியம் இல்லை.மற்றவர்கள் ஜெயித்தால்தான் சாதனை.ரியஸ் களத்தில் இருப்பதே சாதனைதான்.வெற்றி, தோல்வி என்ற சாதாரண அளவீடு அவருக்கு பொருந்தாது.
ரியஸ் மீதும் விமர்சனங்கள இருக்கின்றன.அவற்றால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
‘நவீனமான அவரது செயற்கைகால்கள் விரைவாக ஓடுவதறகு சாதகமாக இருப்பதாக’ விமர்சிக்கிறார்கள்.இருக்கலாம். ஆனால்,ஓடுவதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.மற்றவர்கள் இருப்பதை வைத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.என்றால், அவை இல்லாமலே ரியஸ் போராட வேண்டும்.
விமர்சனங்கள் இருப்பினும் லண்டன் ‘ஒலிம்பிக்’கில்  நிஜமான நாயகன் ‘ஆஸ்கார் பிஸ்டோ ரியஸ்தான்!
மற்றவர்கள் எதிரியை வென்றால் போதும்.இவர் தன் பலவீனத்தையே வெல்ல வேண்டும்.தன்னை வென்றவன்  பிறவற்றை வெல்லுவது கடினம் இல்லைதானே?